அடையாள பரிப்பு ! (Great Identity Grab)

அடையாள பரிப்பு  ! (Great Identity Grab)

அடையாளம், தனிமனித உரிமை, சமூகம், தொழில்நுட்பம், தனியார் தாராளமய பொருளாதார வித்தை.

 ஆதாரா ? உதாரா ? பார்கோட் ரீடரை வைத்து ஸ்கேன் செய்யலாம். ;)

துன்ப சரித்திரம்

2009ல் இருந்து இதுவரைக்கும் நாடெங்கும்  இருக்கும் சமூக ஆர்வலர்கள், சட்ட துறை வல்லுநர்கள், பொருளாதார மேதைகள் UID - ஆதார் பற்றி சாட்சிகள் மற்றும் அறிவியல் ஆய்வுகள்  சார்ந்த விமர்சித்துள்ளார்கள். நீண்ட காலமாக அறங்கேறிவரும் சர்ச்சைகளாலும், தடாலடி மாற்றங்களாலும் நாம் பல துன்பங்களுக்கு உட்படுத்தப்பட்டோம் என்பது  அனைவருக்கும்  அறிந்ததே.

ஆதாரை பற்றி மிக எளிமையாக திரு.மேக்நாத் தெளிவாகவும், நகைச்சுவையுடனும் பின்வரும் கணொளியில் விவரித்துள்ளார். கண்டு மகிழவும்.  ;)

மேக்நாதின் அற்புதமான ஆதார் விளக்க உரை. (ஆங்கிலம்)

மேலும் விரிவான  விளக்க படங்களுடன் கூடிய விவரங்களுக்கு  ஆதாரைப்பற்றிய   என் குறிப்புகளை படிக்கவும்.


கட்டமைப்பு

ஆதார் திட்டம் எளிதான கட்டமைப்பை கொண்டதல்ல. பல நாடுகளில் தனிநபரை தனித்துவமாக அடையாளப்படுத்தும் திட்டங்கள் ஒருபுறம் தோத்திருக்க, மறுபுரம் மைய அரசுகள் இப்படிப் போட்டிப்போட்டுக்கொண்டு துரிதமாக ஏன் இத்தனை துரிதமாக ஒரே மூச்சில் நிறைவேற்றப் போராடுகின்றன. இந்தக்கேள்விக்கான பதிலை நம்மில் சிந்திக்கும் சிலரிடம் விட்டுவிட்டதாலேயே, மீதம் உள்ள அனைவரும் அறியாமையால் மூடர்களாக்கப்பட்டோம்.

 மைய தோல்வி கட்டமைப்பு

ஆதார் திட்டத்தின் கட்டமைப்பு ஒரு மைய புள்ளியை சார்ந்தது. அத்தகைய மையம் ஒரு மிகப்பெரிய அளவிலான குடிமக்களின் உயிரி மற்றும் குடியுரிமை தரவுதளமாகும் (Database). ஒரு நபரின் அடையாளத்தை மட்டும் வைத்து அவருக்கு முறையே வேண்டிய அரசின் சேவைகளையும், சலுகைகளையும் கொண்டு சேர்க்கும் முயற்சியின் பேரில் தான் இத்திட்டம் வாதாடப்பட்டது. இக்கட்டமைப்பையே பல அறிவியல், சட்ட மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால் முற்றிலும் நிராகரிக்கப்பட்டது. இத்தகைய ஒரு புள்ளியை சார்ந்து கட்டமைக்ப்படும் எந்த ஒரு தீர்வும் மிகவும் ஆபத்தாகவே இருக்கும் என்பது அறிவியல், சட்ட மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் கூற்றாகும். அதனை முறையே நீரூபித்தும் உள்ளனர்.

இத்தகைய நிலை மையப்படுத்தலால் ஏற்படும் செயழிலப்பு தோல்வியை (centre point of failure) குறிக்கிறது.


தொழில்நுட்ப கட்டமைப்பு

ஆதார் தனித்துவ அடையாளத்தை உயிரியளவு (biometrics) எனப்படும் புள்ளியல் சார்ந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சேமிக்கின்றது. உயிரியளவை பயன்படுத்தி தனித்துவத்தை ஒவ்வொரு முறையும் நிச்சயப்படுத்துவதில் தொழில்நுட்பம், புள்ளியல் (false positive rate), மற்றும் சமூக-பொருளாதார சிக்கல்கள் இருக்கின்றன என அமெரிக்காவிலும் மற்றும் பிற நாடுகளின் முயற்சியின் மூலம் அதிகாரப்பூர்வமாக பொதுமக்களுக்கு வெளியடப்பட்டன. மேலும் இந்த திட்டத்தில் பயன்படுத்தப்படும் கருவிகள், மென்பொருள், ஆகியன அனைத்தும் பெரும்பாலானவை அமெரிக்காவின் உளவுத்துறையுடன் ஒப்பந்தத்தில் இருக்கும் தனியார் கம்பனிகளிடமிருந்து பெறப்பட்டன.

ஊடுருவலும், இருண்மையும், மையப்படுத்தலும்

இத்தொழில்நுட்பம் முற்றிலும் முழுவதுமாக இந்தியாவில் இருக்கும் இணைய சேவைகளையும், மின்சக்தியையும் நம்பி உள்ளன. இவை இரண்டும் இன்றளவும் நாட்டின் அனைத்து இடங்களுக்கு போய் சேராத நிலையில், இத்தகைய திட்டம் அரசின் ஞாயவிலை கடைகளில் பயன்படுத்தும் போது, மக்களை தொலைதொடர்பு துண்டிப்பு காரணமாகவோ, மின் துண்டிப்பு காரணமாகவோ, நிராகரிக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். இதனால் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளோர் பலர் மரணம் அடைய நேரிட்டது. அத்தகைய செய்திகளை நாம் அவ்வப்போது செய்தி ஊடகத்தில் கண்டுவருகிறோம்.


எங்களின் நேர்காணல்கள்

 ஆதார் அவசியமானதா ? ஆபத்தானதா ? - பிரசன்னாவின் பங்களிப்பு - நன்றி புதிய தலைமுறை.
ஆதாரமா ? சேதாரமா ? - பிரசன்னா,கணேஷ் பங்களிப்பு - நன்றி தந்தி.

சமூக-பொருளாதார கட்டமைப்பு

சமீபகாலமாக நாம் அனைவரும் டிஜிட்டல் மற்றும் இணைய தொழில்நுட்பத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டு, அதனால் நம் (வறுமை கோட்டிற்கு மேல் - நடுத்தர மற்றும் அதற்கு மேல் தட்டு மக்கள்) அனைவரின் வாழ்க்கையிலும் பெரிதளவில் ஆதாயமடைந்தும், பாதிக்கப்பட்டுள்ளோம். மக்கள் அனைவரும் இன்னும் சரியான டிஜிட்டல் கல்வியறிவு (digital literacy) மற்றும் டிஜிட்டல் பிரிவுடன் (digital divide) இருக்கும் நிலையில், மைய மாநில அரசு இயந்திரங்கள், வங்கிகள், மற்றும் பிற தனியார் நிறுவனங்களும் முழுவதும் தொழில்நுட்பத்தை ஒட்டியே சேவைகளை மாற்றியமைத்து, குடிமக்கள் அனைவரின் தொண்டையில் திணிக்கின்றன. இதனால், கல்வியறிவு இல்லாத மக்களை ஓரங்கட்டப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். மீண்டும் இதனால் மிக சிக்கலான பொருளாதார சிரமத்திற்கு மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர்.

இவை முற்றிலும், தனியார் தாராளவாத (neoliberal) கொள்கையையே நிலையை தான் அரசு விரும்புகிறது என்பது உணர்த்துகிறது. இதனால் நமக்கு என்ன பாதிப்பு ஏற்பட போகிறது ??? தரவு இன்று மிக மதிப்பு மிக்க ஒரு பொருளாக கருதப்படும் வேளையில், தனியார் நிறுவனங்கள் தங்களின் சேவைகள் அனைத்தையும் தனிமனித இலக்கை மையமாக வைத்து நுகர்தலை தாராளப்படுத்தும் போக்கில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றன. இவ்வாறான தனியார் சேவைகளக்கு குடிமக்களின் தனித்துவ அடையாளம் ஒரு வரப்பிரசாதமாக கருதப்படுகிறது. இதில் demographic மற்றும் private தரவுகள் அனைத்தும் வர்த்தக பொருளாக பரிமாற்றப்பட்டு வருகிறது. நாம் விட்டு செல்லும் டிஜிட்டல் தடங்கள் (digital footprint) தரவுகளாக ஒன்று சேர்ந்து நம்மை பிரதிபலிக்கின்றன (digital self). இப்படி இருக்க, நம்மை அறியாமலும், நம்மிடம் அனுமதி கேட்காமலும் (without consent) வர்த்தக பொருளாக இருப்பது, நம்மை நாமே விற்றதுக்கு சமம்.

பொருளாதார மிரட்டல்: கட்டாயமா ? தன்னார்வமா ? தெரியலியேப்பா !!

இத்தகைய நிலைமையை சரியாக பயன்படுத்திக்கொண்டது தனியார் தொலைதொடர்பு நிறுவனங்களும், வங்கிகளும், மற்ற இதர தனியார் பண பரிவர்த்தணை நிறுவனங்களே. உச்சநீதிமன்றம் தொலைபேசி எண்ணுக்கு ஆதார் கட்டாயபடுத்தக்கூடாது என அறிவுறித்தியும், அரசு துறைகளும், இதர தனியார் நிறுவனங்களும், உச்சநீதிமன்றத்தையும், அரசியல் சாசனத்தையும் தொடர்ந்து அவமானப்படுத்துவதில் எந்த ஒரு மாற்றமும் காண்பிக்கவில்லை. அவர்கள் நோக்கம் அனைத்தும் மக்களின் தரவுகள் மூலம், விற்பனை அதிகர்ப்பதிலும், அதன் மூலம் இலாபம் ஈட்டுவதிலும் மட்டுமே இருந்தது நாம் அனைவரும் அறிந்ந யதார்த்தமே.


மக்கள்  திருடர்களா,  குடியானவர்களா  ?

இத்தொழில்நுட்பம் சேவைகளை எதிர்ப்பார்த்திருக்கும் மக்களை தான் முதல் திருடர்களாக கருதி வடிவமைக்கப்பிட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, அரசு இயந்திரத்தில் வேறெங்கும் குறைகளும், திருட்டுகளும், கசிவுகள் ஏற்படுவதில்லை என அரசு நம்புகிறது. ஆதலால் மீதம் இருக்கும் நாம் தான் நமக்கு சேர வேண்டிய சேவைகளை எதிர்ப்பார்த்து திருட்டப்பட்டங்களோடு காத்துக்கொண்டிருக்கிறோம்.

மக்களே மகேசன், மகேசனே மோசடிக்காரன் ???

கொடுங்கண்காணிப்பும் சர்வாதிகாரமும் !

தனிமனித சுதந்திரம் கேள்விக்குரியான இக்காலக்கட்டத்தில், நாட்டில் சனநாயகத்தை நிலை நாட்ட வேண்டிய அரசே, ஒரு ஆபத்தான ஆயுதத்தை மக்களின் வரியில் உருவாக்கி - குடிமக்கள் என்னும் நிலையிலிருந்து சொப்புப்பொருளாகவும், மேலும் அடிமையாகவும் நடத்தப்படுவதே சனநாயகத்தையும், நாட்டின் அரசியல் சாசனத்தையும் அவமரியாதைக்கு உட்படுத்துவதாகும். அத்தகைய அரசுகள் மக்களுக்கு எமனாக இருக்குமே அன்றி வேறு எதற்கும் பயன்படாது.

காலம் காலமாக, மக்களை கட்டுப்படுத்த கொடுங்கண்காணிப்பு (mass surveillance) பயன்படுத்தப்பட்டது. இதற்கு தக்க உதராணமாக நாட்சி ஜெர்மனி + IBMயின் தொழில்நுட்ப உதவியையும் சரித்திரத்திலிருந்து அனைவரும் உணரக்கூடியதே. தற்போது ஆதாரின் நிலைமை அத்தகைய நிலையிலிருந்து எந்த விதத்திலும் வேறுபட்டதல்ல. சிந்தித்துப்பார்த்தால், அன்று IBM ஆற்றிய பணியை இன்று போட்டிப்போட்டு செய்ய மிகச்சிறியதிலிருந்து மிகப்பெரிய தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை போட்டிப்போடுகின்றன. இன்று கிட்டத்தட்ட அனைத்து ஸ்மார்ட்சிட்டி திட்டத்தில் மக்களை 24 x 7 x 365 நாளும் கண்காணிக்க தேவையான கேமராக்களே நிறுவப்படுகின்றன.

இதன் மூலம், அரசோ மற்ற தனியார் நிறுவனமோ, ஒரு தனிமனிதனை profile செயக்கூடும். மக்கள் அனைவரையும் இயல்பாகவே குற்றவாளிகளாகவும், திருடர்களாகவும், கலவரக்காரர்களாகவும், பயங்கரவாதிகளாகவும், சித்தரிக்க முடியும். ஒருவரை மொழி, சாதி, மதம், நிறம் சார்ந்து வேற்றுமை படுத்தி மனதளவிலும், பொருளாதார அடிப்படையிலும் துன்புறுத்த முடியம். இந்நிலையில், ஆதாரின் மைய தரவுத்தளம் ஒரு கடிகார வெடிகுண்டு போலவே செயல்படும் (ticking timebomb).

மக்கள் தங்கள் தனியுரிமை (privacy), வங்கி பரிவர்த்தணை (financial privacy), location privacy ஆகியவையை இழந்து, மிகத்துல்லியமாக யார், எங்கு, என்ன செய்துக்கொண்டிருக்கிறார்கள் என அறியலாம். இது சற்றும் சனயாகத்திற்கு துணைபுரியாது. ஆனால் காவல்துறை மற்றும் பலவகை வன்கொடுமைக்கு கைகொடுக்கும். இதனால், பல பத்திரிக்கையாளர்களுக்கும், நாட்டின் உளவுத்துறைக்கும், இராணுவ வீரர்களுக்கும் கொடுமைகளை இழைக்கும்.

இது சர்வாதிகார அரசுக்கே நம்மை அழைத்துச்செல்லுமே அன்றி வேறெங்கும் இல்லை.


அடையாள விற்பனை படு ஜோர்

நமது தனியுரிமைகளை சந்தைமயமாக்கப்பட்டதை நீருபிக்கும் வண்ணம், சனவரி 2018ல் ரூ.500/- க்கும்,10 நிமிடங்களில் தேவையான அளவு தரவுகளை கையகப்படுத்தி கொள்ளலாம். ஒருபுரம் அரசும், UIDAIயும், முதலில் நிராகரித்தும், பின்பு உண்மையை வெளிக்கொணர்ந்த பத்திரிக்கையாளர் மீதும் தண்டனைகளை விதித்தும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தினர். ஆனால் இணைய-சமூக ஆர்வலர்களாலும், சட்ட ஆராய்ச்சியாளர்களாலும், செய்தி அனைவரையும் சென்றடைந்தது.

இதுவே இருண்மை பாதுகாப்பால் (security through obscurity), ஏற்படும் பாதிப்பாகும். இதனை சரிசெய்வது சாத்தியமற்ற ஒன்றாகும். ஒரு முறை நம் தரவு துலைந்தால் துலைந்தது தான், எனெனில் அவை தனித்துவமிக்கவை. யாரிடம் அவை இருக்கின்றதோ அவர்களே உண்மையில் ஒரு நாட்டில் வலிமை படைத்தவர்காளாக உருவெடுப்பார்கள். ஆதாலாலே இத்தரவுகள்க்கு அதிகளவு கள்ளச்சந்தையில் கிராக்கி உள்ளது.

சேர்க்கைக்காக (registration/enrollment) பயன்படுத்தப்படும் மென்பொருள் மற்றும் APIயின் நிரல்கள் கட்டற்ற வடிவத்தில் இல்லாததால் (proprietary)அதில் உள்ள தவறுகளை மென்பொருள்/கணிய/தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களால் சரிசெய்ய இயலாது. இதன் காரணமாகவே அம்மென்பொருளும், கள்ளச்சந்தையில் சுமார் ரூ.2500/-க்கு விற்கப்பட்டது. இது முற்றிலுமாக ஆதார் நோக்கங்களை வேறோடு பியித்து எரிந்துவிட்டது. இது ஒரு அறிவியல் அற்ற கட்டமைப்பால் மட்டுமே நிகழ்ந்த தவறல்ல, அதற்கு பின்பு இருக்கும் அரசின் இருக்கமான மையப்படுத்தல் மற்றும், கட்டற்ற தொழில்நுட்பத்தின் மீதான தன்னம்பிக்கை இன்மை, தனியாரிடம் அனைத்து உள்கட்டமைப்பு வெளிக்கொள்முதல் (outsourcing) கொடுக்கும் போக்கும் காரணமாகும்.

ஆதார் திட்ட காரணங்கள் இதனால் அடியோடு தகர்க்கப்பட்டது.


உச்சநீதிமன்றம் Vs அரசு  - இடையே அரசியல் சாசனமும்

ஆதார் தொடங்கின வருடம் தொட்டே, இன்றளவும் உச்சநீதிமன்றத்தில் சட்ட வல்லுநர்கள் உதவியுடன், அரசியல்சாசனப்படி, சனநாயகத்தின் முறைகளை மேற்கோள்காட்டி, பல அறிவியல் சார்ந்த ஆவணங்களையும், சமூக மற்றும் பொருளாதார வல்லுநர்களாலும், பன்முறை பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது (public interest litigation). அரசும் எப்பொழுதும் வீம்புக்கென்றே மாறான சர்ச்சைகளை கிளப்பி, அதனால் உச்சநீதிமன்றத்தில் பல சட்டவியல் (jurisprudence), மூலமாக, அரசு தரமறுத்த தனிமனித உரிமை (right to privacy), பற்றி தீவிர ஆலோசனைக்கு பிறகு தனிமனித உரிமையை அரசியல் சாசனத்தில் அடிப்படையான சட்டமாக அறிவித்தது. அது மட்டுமின்றி, GDPR போன்ற மற்ற சனநாயக நாட்டில் பயனில் இருக்கும், privacy சட்டத்தைப்போன்று உடனடியாக செயல்படுத்த உத்தரவிட்டது.

நாடளுமன்றத்திலும் பன்முறை ஆதாருக்கு எதிராக தக்க காரணங்களோடு வாதாடப்பட்டது. மேலே திரு.மேக்நாத் கூறியதைப்போன்று மிகவும் அற்பமான, அட்டூழியமான முறையில் ஆதாரக்கு சட்டவடிவமைப்பு - பெரும்பாலான எதிர்ப்பையும் மீறி ஏற்படுத்தப்பட்டது. இடை இடையே மக்களுக்கு ஏற்பட்ட பல்தரப்பட்ட துன்பங்கள் - சிறார் மதிய உணவுத்திட்டம் தடங்கல், MNREGA, தனியார் தொலைத்தொடர்பு ஆதார் கட்டாயப்படுத்துதல், ரேசன் நிராகரிப்பு, தவறான வங்கி கணக்கை சுட்டுதல் போன்றவை, demonitization உட்பட பல்வேறு கோணங்களிலிருந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கும், அரசை எதிர்த்து சவால்களும் நடத்தப்பட்டன.

இது முறையே ஷா கமிட்டி, கிருஷ்ணா கமிட்டகளை அமர்த்தி அவ்வப்போது பரிந்துரைகள் கோரப்பட்டது. தற்போது வரை எந்த ஒரு தீர்ப்பும் மக்களுக்கு சாதகமாக முழுமையாக அமையாவிட்டாலும், பொறுமையாக சனநாயகப்பண்பை நோக்கியே இருக்கின்றன எனலாம். ஆனால் அரசு தரப்பு எவ்வாறெல்லாம் மக்களை அறியாமையிலும், குழப்பத்திலும், கட்டயாப்படுத்தியும் வைக்க நினைக்கிறதோ, அவ்வாறெல்லாம் முயற்சித்துக்கொண்டிரு்கிறது.